மீண்டும் தலைத்தூக்கும் கந்துவட்டி… நடவடிக்கை தேவை… அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுவானைமேடு துறிஞ்சிக் கொல்லையை சேர்ந்தவர் செல்வக் குமார். இவர் உளுந்தூர்பேட்டை 10 ஆவது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1 ஆம் தேதி கடலூர் வந்த நிலையில், நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக செல்வகுமார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாகவும், ஆனால் அந்த பெண் கடன் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்த தால் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கடலூர் 3 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று செல்வக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வக்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், கடலூர்,புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கள்ள லாட்டரி, ஆன்லைன் ரம்மி, கந்துவட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென அம்மாவும் அம்மா அரசும் தடை செய்ததோ அவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன. கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்? கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.