முதுநிலை நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முதுநிலை நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. மற்றும் எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக முதுநிலை நீட் 2022 தேர்வு மே 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கடந்த 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு நடந்துகொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி இளநிலை மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 2021-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து கலந்தாய்வும், 2022-ம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பதால் குழப்பம் ஏற்படும். எனவே மே 21-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், 2021 ஆண்டுக்கான முதுகலை மருத்துவ கலந்தாய்வே இன்னும் முடியவில்லை. அதற்குள் மே 21-ம் தேதி முதுகலை நீட் நுழைவுத்தேர்வு எப்படி நடத்த முடியும்? என தெரிவித்தார்.
சுமார் 2.6 லட்சம் மருத்துவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே தற்போதைய நிலையில் 2022 முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பு கூறியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும், நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பின் நீட் முதுநிலை தேர்வை வரும் 21-ம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, முதுநிலை நீட் 2022 தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் இல்லை எனவும் கூறியுள்ளது.
இதனால் மே 21-ம் தேதி திட்டமிட்டபடி நீட் முதுநிலை தேர்வை நடத்துவதற்கு தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
