முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற தனியார் பேருந்து. கண்மூடிதனமாக பேருந்தை இயக்கிய ஒட்டுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (31). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கொண்டிராஜபாளையம் பகுதியில் தஞ்சையிலிருந்து பாபநாசம் நோக்கி அதிவேகம் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற அகிலாண்டேஸ்வரி ஸ்கூட்டி மீது மோதியது. இதனால் ஸ்கூட்டியுடன் அகிலாண்டேஷ்வரி பேருந்தின் அடியில் சிக்கி கொண்டார்.
இதனை அறிந்தும் பேருந்தை நிறுத்தாமல் ஒட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார். சுமார் 500 மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்து சென்ற பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அகிலாண்டேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்மூடிதனமாக பேருந்தை இயக்கிய ஒட்டுநரை அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்த வந்த தஞ்சை நகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அகிலாண்டேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒட்டுநரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
