ராஹத் டிரான்ஸ்போர்டில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், ராஹத் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கை சிறைப்பிடித்து போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் எனும் தனியார் சொகுசு பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களை பங்குதாரர்களாக இணைத்துள்ளார். அதாவது ஒரு பேருந்திற்கு 16 பங்குதாரர்கள் என ஒப்பந்தம் போட்டு ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 3,000 என்கிற முறையில் ஆயிரத்திற்க்கும் மேற்படவர்களிம் முதலீடாக ஆயிரம் கோடிக்கு மேல் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் முதலீடு பெற்ற பணத்தில் பேருந்துகளை வாங்காம, அனைத்து பேருந்துகளையும் வங்கி கடனில் வாங்கிவிட்டு, பொதுமக்களின் முதலீட்டில் பெட்ரோல் பங்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வெளிநாடுகளில் முதலீடு என்று அவரின் குடும்பத்தினரின் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்த கமாலுதீன், திடீரென கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
இதனால் முதலீடு செய்த மக்கள் கமாலுதீனின் மனைவியிடம் முதலீட்டு தொகையை திரும்ப கேட்டதற்கு, இறந்த கமாலுதீனிடம் போய் பணத்தை கேளுங்கள் என்று பிரச்னை செய்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட குற்றபிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ராஹத் நிறுவனம், உரிமையாளர் காமலுதீன், அவரது மனைவி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கூறி தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கமாலுதீன் குடும்பத்தாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கை சிறைபிடித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணத்தை கொடுத்த நாங்கள் தெருவில் நிற்பதாகவும், தங்கள் பணத்தில் அவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்துவதாகவும் குற்றம் சாட்டும் மக்கள், தங்களது முதலீடு கிடைக்கும் வரை போராடுவதை தவிர வேறு வழியில்லை, மேலும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.