BREAKING NEWS

விருப்பத்தின் படி பாலியல் தொழில் .. கைது நடவடிக்கையை தவிருங்கள்.. போலீசுக்கு நீதிமன்றம் அறிவுரை விபச்சார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர்.

விருப்பத்தின் படி பாலியல் தொழில் .. கைது நடவடிக்கையை தவிருங்கள்.. போலீசுக்கு நீதிமன்றம் அறிவுரை விபச்சார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர்.

பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபடும் வயது வந்த தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்த போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயகுமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாக்கல் செய்த உதயகுமார் தரப்பில், பாலியல் தொழிலாளிகள் விருப்பப்பட்டு தொழிலில் ஈடுபடும்போது, அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும், பாலியல் தொழிலுக்கான விடுதி நடத்துவது தான் சட்டவிரோதம் என்று வாதிடப்பட்டது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இடம் பெறவில்லை. அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட, அவரது செயல்பாடுகள் குற்றம் விளைவித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விபச்சார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர், பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும், விடுதிகளை நடத்துவதுதான் சட்டவிரோதம் என்றும் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, வயது வந்த ஒரு ஆணோ, பெண்ணோ சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபட்டால், அந்த தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )