விளாத்திகுளம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து : மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம் : பேருந்து ஓட்டுனர் தப்பியோட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி மல்லிகா. இவர் இன்று தன் மகள் சேர்மக்கனி மற்றும் மகன் முத்துவேலுடன் மருத்துவமனைக்குச் செல்வதற்காக பனையூரில் இருந்து விளாத்திகுளத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது துளசிப்பட்டி விலக்கில் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் ஆட்டோவும் மோதியது.
ஆட்டோ முற்றிலும் நசுங்கி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்து மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்தில் சிக்கி மகன் மற்றும் மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பேருந்துக்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.