வெளியேறினார் ஓபிஎஸ்… அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: அரசு அதிகாரிகள் அதிரடி.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடைபெற்ற மோதலை அடுத்து கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர். இதையடுத்து, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்தார். அப்போது, கட்சி அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த இடமே போர்க்களமாக காட்சி அளித்தது. இந்த மோதலில் அதிமுகவினர் 10 பேரும், பொதுமக்கள் ஒருவர் மற்றும் 2 காவலர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக தலைமை கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே கட்சி தலைமை அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து வருவாய்துறையினர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸாருடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, அதிமுக அலுவலக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

