வைகை அணையில் தரமற்ற பழங்கள் விற்பனை! நடவடிக்கை எடுக்க; இந்து எழுச்சி முன்னணியினர் கோரிக்கை.

தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களில் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையும் ஒன்றாகும்.
இவ்வணைக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நாள் தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் அணையின் வலது மற்றும் இடது கரைகளில் உள்ள கடைகளில் ஐஸ்கிரீம் பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதில் சில கடைக்காரர்கள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் நோக்கில் குறைவான விலையில் உள்ள பொருட்களை, அதிக விலைக்கும், அழுகிய பழங்களை விற்பனை செய்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தொற்று நோய்க்கு ஆளாவர்கள் என புகார் எழுந்து வந்தது.
மேலும் இது குறித்து வைகை அணை அதிகாரிகளிடம் புகார் கூறியும் அவர்கள் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அணை பகுதியில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், வைகை அணையை சுற்றி பார்க்க வந்தவர்கள், அணையின் வலது கரையில் உள்ள பழக்கடையில் விற்பனைக்காக தண்ணீர் கப்பில் வைக்கப்பட்டிருந்த நாவல் பழத்தை ரூ.30 க்கு வாங்கி குழந்தைக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால் தண்ணீர் கப்பில் மேல் பக்கம் இருந்த இரண்டு மூன்று பழங்கள் மட்டுமே நன்றாக இருந்துள்ளது.
அதற்கு கீழே இருந்த பழங்கள் அழுகிய நிலையில் புழுக்கள் இருந்துள்ளது.
இது குறித்து அந்த கடைக்காரரிடம் அவர்கள் கேட்டதற்கு மிரட்டும் தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வைகை அணை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பிறகு இச்செய்தி சமூக வலைதளங்களில் மூலமாக வெளியானதை அடுத்து இதை அறிந்த தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் ராம்ராஜ், வைகை அணை பொதுப்பணித்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி விரைவில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.