அதிமுக மாஜிகளை தட்டித் தூக்கும் (திமுக) அண்ணா அறிவாலயம்!

தமிழ்நாடு அரசியலில் பாஜக – அதிமுக – பாஜக என பல முறை கட்சி மாறிய மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்த அன்வர் ராஜா, திமுகவை அரசியல் காலத்தின் தொடக்கம் முதல் எதிர்த்த மைத்ரேயன் இருவரும் அதிமுகவை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஒரே மாதத்தில் அதிமுகவில் இருந்து மூன்று புள்ளிகளை தூக்கி சம்பவம் செய்திருக்கிறது அதிமுக முன்னாள் மந்திரி அன்வர்ராஜா, முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான், முன்னாள் எம்பி மைத்திரேயின் வரிசையில் அதிமுக பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைவர்களை குறிவைத்து களத்தில் இறங்கி இருக்கின்றனர் அந்தந்த பகுதி மந்திரிக்கள் விரைவில் மேலும் பல முக்கிய புள்ளிகள் திமுகவுக்கு தாவலாம் என சொல்லப்படுகிறது
தேசிய அளவில் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. கடந்த காலம் தொடங்கி தற்போது வரை ஏதாவது ஒரு திராவிட கட்சிகள் தயவால்தான் அக்கட்சி எம்எல்ஏக்களையே பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.
2021ஆம் ஆண்டின் தேர்தலிலும் அப்படித்தான் நடந்தது. அதே நேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியால் வெற்றி பெற விட முடியவில்லை. குறிப்பாக ராயபுரம் தொகுதியில் மிக பலமாக இருந்த முன்னாள் நிதித்துறை மந்திரி ஜெயக்குமார் தோல்வியடைந்ததற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என அவரே பேசியிருந்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமைகளை அவர் விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது, தொடர்ந்து முன்னாள் மந்திரிகள் பதிலடி கொடுக்க அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது,
இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என எடப்பாடி கே. பழனிச்சாமி பேசினார். அதே நேரத்தில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட சில முன்னாள் மந்திரிகள் மீண்டும் பாஜக கூட்டணியை அமைக்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர். அதற்கு பலனும் கிடைத்தது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழ ஆரம்பித்தன. முதல் முறையாக அதிமுக முன்னாள் மந்திரி அன்வர் ராஜா பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணி என விமர்சித்ததோடு சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என கூறியிருந்தார். அவர் அதிருப்தியில் இருப்பது தெரியவந்த நிலையில் திமுக தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பயனாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா. அதிமுகவின் சிறுபான்மை தலைவர்களின் முக்கியமானவராக கருதப்பட்ட அன்வர் ராஜா ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகயிருந்தார்.
அவரது மறைவுக்கு பின் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு மீது அதிருப்தியில் இருந்து அவர் பிறகு கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இணைந்தாலும் பாஜக கூட்டணியால் வெறுப்பில் இருந்த அவர் திமுக மந்திரிகள் மூலம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து புதுக்கோட்டையில் வலுவாக மக்கள் செல்வாக்குடன் இருக்கும் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். அதில் சட்டத்துறை மந்திரி ரகுபதியின் பங்கு அதிகம் என சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டையைப் பொருத்தவரை முன்னாள் மந்திரி விஜயபாஸ்கர் வலுவாக இருக்கும் நிலையில் அவரை எதிர்த்து கார்த்திக் தொண்டைமான் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து பல முன்னாள் மந்திரிக்கள், தலைவர்கள் திமுகவில் இணைவார்கள் என சொல்லப்பட்டது.
அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் பாரம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த மைத்ரேயனும் தற்போது திமுகவில் இணைந்து இருக்கிறார். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் இந்த முறை மீண்டும் டெல்லிக்கு செல்லலாம் என ஆசைப்பட்டார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக் கொள்ளாத நிலையில் அதிருப்தியில் இருந்த அவர் மக்கள் நல்வாழ்வு (ம) சுகாதாரத்துறை மந்திரி மா.சுப்பிரமணியன் மூலமாக தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்.
அவருக்கும் ஏதாவது ஒரு மாநில பொறுப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இப்படி அதிமுக தரப்பில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய புள்ளிகளை திமுகவுக்கு இழுக்க மந்திரிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதற்கேற்றார் போல் மந்திரிகளும், மாவட்ட செயலாளர்களும் தங்கள் பகுதியில் இருக்கும் அதிமுக தலைகளை பட்டியலெடுத்து வருகின்றனர்.
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல” சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு, மந்திரி பதவி, கட்சியில் முக்கிய பொறுப்பு என பல்வேறு காரணிகளை எடுத்துக்காட்டி அவர்களை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பல முன்னாள் மந்திரிகள் இந்த பட்டியலில் இருக்கிறார்களாம். விரைவில் பல முக்கிய தலைகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவலாம் என சொல்லப்படுகிறது.
அதே வேளையில் தவெகவிற்கு போகாதது ஏன்?
1. தமிழக வெற்றிக் கழகம் திமுகவை கடுமையாக எதிர்க்க கூடிய கட்சிதான். மைத்ரேயன், அன்வர் ராஜாவிற்கு ஏற்ற கொள்கை இருந்தாலும்.. அவர் அங்கே செல்லவில்லை.
2. இதற்கு காரணம் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறினாலும்.. பாஜகவை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர் மத்திய அரசை விமர்சிக்கும் அறிக்கைகளில் கூட திமுகவைத்தான் கடைசியில் விமர்சனம் செய்கிறார். பாஜகவை பெரிதாக தாக்குவது இல்லை.
3. பாஜகவை பல இடங்களில் நேரடியாக விஜய் அட்டாக் செய்வது இல்லை. இது அன்வர் ராஜாவின் முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.
4. அதோடு தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறார்கள். ஒரு பிரம்மாண்ட கட்சி அதிமுகவிற்கு வருவதாக எடப்பாடி கூறி இருப்பது இதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரேயன், அன்வர் ராஜா தமிழக வெற்றிக் கழகத்திற்கு போய்.. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது தர்மசங்கடமாக இருக்கும்.
5. அதோடு தமிழக வெற்றிக் கழகம் சிறிய கட்சி. இன்னும் நிரூபிக்காத கட்சி. அப்படிப்பட்ட கட்சியில் எதிர்காலமும் இல்லை. மைத்ரேயனுக்கு பெரிய பதவிகள் இங்கே கிடைக்காது.
6. திமுகவில, அதிமுகவில் இருந்து வந்த சேகர் பாபு தொடங்கி செந்தில் பாலாஜி வரை பலர் பெரிய அளவில் மரியாதை பெறுகின்றனர். முக்கிய பொறுப்புகளையும் பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் மைத்ரேயன், அன்வர் ராஜாவிற்கு இது பெரிய அளவில் நல்வாய்ப்பாகவும் இருக்கும்.. என்பதால் அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றதாக கூறப்படுகிறது.
7. எண்ணப்படி இரண்டாம் கட்ட தலைவர்களை பெரிதாக மதிப்பது இல்லை என்ற புகார் உள்ளது. மைத்ரேயன், அன்வர் ராஜா கட்சி மாற இதுவும் காரணமாக இருக்கலாம்.
திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. கல்வி, சமூதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக இருக்கிறது.
கருணாநிதியின் மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனால், ஸ்டாலினின் சிப்பாயாக திமுகவில் இணைந்துள்ளேன். 2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும் ஸ்டாலின்தான் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றுவார்.
வருகின்ற தேர்தல் 2 ஆம் இடத்துக்கானது. அதிமுகவின் போக்கு சரியாக இல்லை. பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல்திட்டம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார். அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒருசிலர் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்திருக்கிறார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ளாததால் அதிமுகவில் இருந்து விலகியுள்ளேன்.
காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தை கண்டு, தன்னை ஒரு எம்.ஜி.ஆர் போலவும், அம்மையார் ஜெயலலிதா போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு ஒரே ஒரு உதாரணம், உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
திராவிட கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியை முடிவு செய்வது அவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அதிமுக கூட்டணியை முடிவு செய்யும் சுவிட்ச் டெல்லியில் இருக்கிறது. டெல்லிக்கு அதிமுக தலைமை கட்டுப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் பங்கு குறித்து மக்கள் யோசிப்பார்கள். திமுக ஆட்சி தொடர்வதற்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயன் நீக்கப்படுவதாகவும், கட்சியின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் அனைத்து பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.