அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சர்ஜில் இமாம் உமர் காலித் போன்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.அறிக்கை.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கில் மாணவர் ஆர்வலர்களான ஷர்ஜில் இமாம், சபூரா சர்க்கார், ஆசிப் இக்பால் தன்ஹா மற்றும் எட்டு பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
தில்லி காவல்துறை அவர்களை பலிகடா ஆக்கிவிட்டதாகவும் அவர்கள் கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாகவோ ஆயுதம் வைத்திருந்ததாகவோ கற்கள் எரிந்ததற்காகவோ முதன்மை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி டெல்லி சாகித் கூடுதல் மாவட்ட நீதிபதி அருள் வர்மா அவர்களை விடுவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களின் போது கலவரம் மற்றும் சட்டவிரோதமாக கூட்டம் நடத்தியதாக அவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது. உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை என்றும் அவர்கள் தாக்கல் செய்த குற்ற பத்திரிகைகள் தவறானது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர்களை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்துவது நாட்டின் குற்றவியல் நீதி அமைப்புக்கு நல்லதல்ல இது போன்ற காவல்துறையின் நடவடிக்கை அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அடிப்படை உரிமையை பயன்படுத்தும் குடிமக்களின் சுதந்திரத்திற்கு கேடு விளைவிப்பதாகும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது.
கருத்து வேறுபாடு மற்றும் கிளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை புலனாய்வு அமைப்புகள் கண்டறிய வேண்டும். இந்த வழக்கில் புலனாய்வு அமைப்புகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லது நம்பகமான உளவுத் தகவல்களை சேகரித்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களுக்கு எதிராக இது போன்ற குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதில் இருந்து அது விலகி இருக்க வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.
முகமது காசிம், மஹ்மூது அன்வர், ஷாஜர் ரசா கான், முகமது அபுசார், முகமது சோய ப், உமைர் அஹமது, பிலால் நதீம், சர்ஜீல் இமாம், ஆசிப் இக்பால் தன்ஹா, சந்தா யாதவ் மற்றும் சபூரா சர்க்கார் ஆகியோரை நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது.
குறிப்பாக ஷார்ஜீல் இமாம் இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின. கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதால் மூன்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகிறார்.
சர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை நீதிமன்றம் அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்த நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இன்ன பிற வழக்குகளையும் ஒன்றிய அரசு திரும்ப பெற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.