ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு: ஈபிஎஸ் புறக்கணிப்பு.

தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர்.
அண்மை காலமாக தமிழக ஆளுநர் ரவியின் பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ஆளுநர் ரவி, அனைத்துக் கட்சியை சேர்ந்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருந்த காரணத்தால் இந்த முடிவை தமிழக அரசு எடுத்தது. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவி இன்று அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்தை புறக்கணித்தார். ஓபிஎஸ் பங்கேற்றுள்ள நிலையில் இந்த முடிவை ஈபிஎஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.