BREAKING NEWS

இலுப்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்

இலுப்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்

சொத்துக்காக மனைவி, 3 மகள்கள் இணைந்து திட்டமிட்டு இளைய மகளின் காதலன் மூலமாக கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலம்:-

மனைவி, 3 மகள்கள், இளைய மகளின் காதலன், காதலனின் நண்பர் என 6 பேர் கொலை செய்த 10 மணி நேரத்தில் பொறையார் காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பூர் கிராமம் ரோஜா நகர் நடுத்தெருவில் வசித்து வந்தவர் மகேந்திரன்(60). வெளிநாடு சென்று வந்தவர். இவருக்கு சரஸ்வதி(57) என்ற மனைவியும், மகாலட்சுமி(32), கலைவாணி(31), அக்ஷயாதேவி(19) ஆகிய 3 மகள்களும்; உள்ளனர். முதல் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் மூன்றாவது மகள் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். ஒரு மகள் வெளியூரில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் கணவர் பிரபாகரனுடன் மூத்த மகள் மகாலட்சுமி (33), வசித்து வருகிறார்.

பிரபாகரன் கொடுமைப்படுத்தியதாக கடந்த மாதம் மகாலட்சுமி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் கணவர் பிரபாகரன் தலைமறைவான நிலையில் தந்தை மகேந்திரன் வீட்டிற்கு மகாலட்சுமி வந்து தங்கி உள்ளார். பிரபாகரனை தேடிவந்த போலீசார் வியாழக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் பிரபாகரனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் மகேந்திரன் மகளுடன் வீட்டில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வீடு புகுந்து மகாலட்சுமியை வெளியே தள்ளிவிட்டு தந்தை மகேந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். தன் கண் முன்னாலேயே தந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்த மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் அறிந்து வந்த மாவட்ட எஸ்.பி சினேகா ப்ரியா நேரில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பொறையார் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் போலீசார் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேந்திரன் கொலை செய்யப்பட்டதற்கு காரணம், குடும்ப பிரச்சனையா? முன் விரோதமா என்ற கோணத்தில பொறையார் போலீசார் மேற்கொண்டனர்.

விசாரணையில் மகேந்திரன் கையில் பிரேஸ்லெட், செயின் போன்ற நகைகள் போட்டிருந்ததாகவும் நகைகள் கொலை செய்யப்பட்ட மகேந்திரன் உடலில் இல்லை என்று அப்பகுதி வாசிகளால் கூறப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலைபார்த்துவந்த மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய நிலையில், குடும்ப சண்டை காரணமாக மனைவியை பிரிந்து தனியே வசித்து வந்தார். இதனால் மகேந்திரனை அவரது சகோதரி குடும்பத்தார் கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முதல் மகள் மகாலட்சுமியை அவரது கணவர் பிரபாகரன் தன்னை கொடுமைப் படுத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் பிரபாகரன் தலைமறைவானார். தொடர்ந்து மகாலெட்சுமி தந்தை மகேந்திரன் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். தலைமறைவான பிரபாகரன் கடந்த 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பொறையார் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார்.

அதேநாளில் இரவு மர்மநபர்கள் இருவர், மகேந்திரனின் வீட்டுக்குள் புகுந்து, மகாலெட்சுமியை வெளியே தள்ளி விட்டுவிட்டு மகேந்திரனை கழுத்து வயிற்றில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகையை அறுத்துக்கொண்டு தப்பி சென்றதாக மூத்த மகள் மகாலெட்சுமி சம்பவம் குறித்து பொறையார் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பொறையார் போலீசார் மூத்த மகள் மகாலட்சுமி விசாரணையின் போது உண்மையை கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிந்து மகேந்திரனின் மனைவி, 3 மகள்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மகேந்திரன் தனது வங்கிக்கணக்கில் உள்ள ரூ.47 லட்சம் பணம், வீடு மற்றும் வீட்டுமனைகளை தன்னை கவனித்துவரும் சகோதரியின் மகன் சாதிக் என்கிற பிரவீன்குமாருக்கு எழுதிவைக்க எண்ணியதால், தங்களுக்கு சொத்து கிடைக்காது என்று கருதி மனைவி சரஸ்வதி மற்றும் 3 மகள்கள் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர்.

மகேந்திரனின் இளையமகள் அட்சயாவின் காதலன் திருப்பூர் ஆண்டிபாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்த பிரேம்குமார் மகன் கௌதம்குமார்(21), அவனது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் மகன் ரஞ்சித்குமார்(21) ஆகிய இருவரிடம் ரூ.5 லட்சம் பணம் தருவதாக கூறி மகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ய தேதி குறித்து, 15-ஆம் தேதி இரவு வீட்டின் லொகேஷனை மூத்த மகள் மகாலட்சுமி, கௌதம்குமாருக்கு அனுப்பி வர செய்துள்ளார்.

மகேந்திரனை கொலை செய்ததும், கொலை குற்றத்தை பிரபாகரன் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறியாமல் மகாலட்சுமி அவர் மீது சுமத்தி தப்பித்து விடலாம் என்று எண்ணியது தெரியவந்தது. இதையடுத்து சரஸ்வதி, மகள்கள் மகாலட்சுமி, கலைவாணி, அக்ஷயா, அவரது காதலன் கௌதம்குமார், அவரது நண்பர் ரஞ்சித் குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சரஸ்வதியிடம் இருந்த மகேந்திரனின் 3 பவுன் பிரேஸ்லெட் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் ஆகியவற்றை பொறையார் போலீசார் பறிமுதல் செய்தனர். சொத்துக்காக மகேந்திரனை அவரது மனைவி, மகள்கள் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS