உலக செய்திகள்
உக்ரைனில் அதிகரித்த போர் பதற்றம்.. எந்த நேரத்திலும் ரஷ்ய படைகள் ஊடுருவ வாய்ப்பு.
பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் படைகள் குவிக்கப்படுவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனில் ரஷ்யப் படைகள் ஊடுருவி போர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. உக்ரைனுக்குள் ஊடுருவினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால், எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவினால், கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று பைடன் எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை போலந்துக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
மேலும், உக்ரைனிலிருந்து தங்களது நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், பாதிப்பு ஏற்பட்டால் விமானம் மற்றும் ரயில் மூலம் மீட்க முடியாது என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தூதரக நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் அறிவித்துள்ளது.