BREAKING NEWS

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;

“உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிருபித்தவர்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர் புரட்சித் தலைவர் அவர்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் புரட்சித் தலைவர்.

அவர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கமும் அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.

இந்தக் கொள்கை தான், மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வழிவகுத்தது. இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் தொல் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் சமூக நீதிகாத்த வீராங்கணை புரட்சித் தலைவி அம்மா அவர்கள். “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல். “எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திய மாண்புமிகு அம்மா அவர்களை சாதியின் பெயரால் விமர்சிப்பது நியாயமா என்பதை தொல் திருமாவளவன் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக தொல் திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது.

எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் குறித்த விமர்சனத்தை தொல் திருமாவளவன் அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

CATEGORIES
TAGS