குறைந்தது தக்காளி விலை.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தக்காளி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில் தமிழக தென்மாவட்டங்களில் பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த தக்காளி வீணானது. இதனால், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் தக்காளி விலை உயர்ந்தது. இத்துடன், அசானி புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் மழை பெய்த மழைக்காரணமாகவும் தக்காளி பயிர்கள் நாசமாகி வரத்து குறைந்தது. இதன் காரணமாகவும் தக்காளி விலை உயர்ந்தது. முன்னதாக கிலோ தக்காளி ரூ.10 விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் திடீர் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக கடந்த 15 நாட்களில் மட்டும் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் வரத்து அதிகரிப்பு மற்றும் டீசல் விலைக்குறைக்கப்பட்டதன் காரணமாக தக்காளி விலை குறைய உள்ளதாக தகவல்கள் வெளியான சூழலில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்தவிலை கடைகளில் இரண்டாம் ரக தக்காளி கிலோ ரூ.50க்கும், முதல் ரக தக்காளி விலை கிலோ ரூ.60க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுவதாகவும் கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.