சித்தையன்கோட்டை அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் கொள்ளை. உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையால், விவசாயிகள் அச்சம்

சித்தையன்கோட்டை அடுத்த ஊத்துவாய்க்கால் அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் தள்ளப்படுவதால், அந்தப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மல்லையாபுரம், காமன்பட்டி, சித்தையன்கோட்டை, போடிகாமன்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள், கரடு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இரவு பகல் நேரங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரி, டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம், செம்மண் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இந்த செம்மண் கொள்ளையால் மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் இந்தப் பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சித்தையன்கோட்டையில் இருந்து சித்தரேவு செல்லும் வழியில் ஊத்துவாய்க்கால் அடுத்த, பள்ளிவாசல் கரடு என்ற பகுதியில் இரவு பகலில் செம்மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால், விளை நிலங்கள் சேதப்படுவதுடன் கரடு பகுதியில் வாழும் வனவிலங்குகள் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பகுதி வழியாக விருதுநகரில் இருந்து கோவைக்குச் செல்லும் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அருகே செம்மண் கொள்ளை நடைபெறுவதால், உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் எந்த நேரத்திலும் உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படலாம்? என்ற அச்சத்தில் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க இந்த பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போடிகாமன்வாடி கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மண் கொள்ளை நடைபெறும் இடம் போடிக்காமன்வாடி கிராமத்திற்கு உட்பட்டது இல்லை. அது சித்தரேவு கிராமத்திற்கு உட்பட்டது என்றார்.
அதேபோல் சித்தரேவு கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மண் கொள்ளை நடைபெறும் இடம், போடிக்காமன்வாடி கிராமத்திற்கு உட்பட்டது. சித்தரேவு கிராமத்துக்கு உட்பட்டது இல்லை என்றார். இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களும் தங்கள் வருவாய் கிராமத்திற்கு உட்பட்டது இல்லை என, மாறி மாறி கூறி வருவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சித்தையன்கோட்டை அடுத்த, ஊத்துவாய்க்கால் அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் கொள்ளையால் சாய்ந்து விழும் நிலையில் உள்ள, உயர் அழுத்த மின் கோபுரம்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்