சினிமா
ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்தின் ஷூட்டிங், ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்திருந்தனர். டி.இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் 168-வது படம்.
ரஜினியின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார், விஜய் நடிப்பில் ’பீஸ்ட்’ படத்தை இப்போது இயக்கி முடித்துள்ளார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் படம், ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அது ஆகஸ்ட் மாதத்துக்குத் தள்ளிப் போயிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.