BREAKING NEWS

தமிழ்நாட்டின் அடுத்த (டிஜிபி) லிஸ்டில் யார்.. நாள் குறித்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் அடுத்த (டிஜிபி) லிஸ்டில் யார்.. நாள் குறித்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டிஜிபி) தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய முடிவை எட்டியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 2-3 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த உத்தரகாண்ட் மாநில ஐபிஎஸ் அதிகாரி ஆவார். முதுகலைப் பொறியியல் பட்டதாரியான இவர், SAIL மற்றும் BEL போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பொறியாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர். தமிழ்நாட்டில் சேலம், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி/ஐஜி, சிறப்பு அதிரடிப் படை ஏடிஜிபி போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் தேர்தலை முன்னிட்டு, சங்கர் ஜிவால், ஐபிஎஸ்., பணி நீட்டிப்பை எதிர்பார்த்த நிலையில், புதிய டிஜிபி-யை நியமிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. புதிய டிஜிபி-யை தேர்வு செய்யும் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

தமிழ்நாடு அரசின் பரிந்துரைப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். இதில், தமிழ்நாடு உள்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய டிஜிபி ஆகியோருடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு மீண்டும் முதல்வருக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியலில் இருந்து அவர் ஒருவரைத் தேர்வு செய்வார்.

சென்னை மற்றும் டெல்லியில் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. இதில், சங்கர் ஜிவால், ஐபிஎஸ்., சில பெயர்களைப் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில், அபய்குமார் சிங், வன்னி பெருமாள், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால், வினித் தேவ் வான்கடே, மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன் ஆகிய 8 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகிய மூவரின் பெயர்கள் மத்திய அரசால் தமிழ்நாடு முதல்வருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர், 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர் டிஜிபி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. 1998 ஆம் ஆண்டில் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் இவர் முக்கியப் பங்காற்றினார். சமீபத்தில், இவர் சென்னை காவல் ஆணையர் பதவியிலிருந்து தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டார்.

சந்தீப் ராய் ரத்தோர் மீது சில பணித்திறன் தொடர்பான புகார்கள் எழுந்ததையடுத்து, தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அபய்குமார் சிங் அல்லது சீமா அகர்வாலை அடுத்த டிஜிபியாக நியமிக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சீமா அகர்வால், ஐபிஎஸ்., இந்தப் பட்டியலில் தற்போது முன்னிலையில் இருக்கிறார்.

சீமா அகர்வால், ஐபிஎஸ்., டிஜிபி ஆனால், லத்திகா சரணுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஒரு பெண் டிஜிபி வருவார். வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த ஓராண்டு தமிழ்நாடு அரசுக்கு மிக முக்கியமானது.

இக்காலகட்டத்தில் ஆளும் கட்சிக்கு நம்பிக்கையான ஒருவர் டிஜிபி பொறுப்பில் இருப்பது கட்டாயமாகும். தேர்தல் பணிகளுடன் சட்டம் – ஒழுங்கை திறம்பட நிர்வகிப்பது பெரிய சவால். அதனாலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்பதவிக்கு உகந்தவரைத் தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

CATEGORIES
TAGS