தற்கொலை மையங்களா தனியார் கல்விக்கூடங்கள்?

‘பள்ளி செல்ல விரும்பு… பாடம் எல்லாம் கரும்பு’ என ஒரு காலத்தில் குழந்தைகள் சத்தமாக பாடியது ஞாபகமிருக்கிறதா?. அந்தப் பாடல் பள்ளிகளில் மட்டுமின்றி தெருக்கள் முழுவதும் எதிரொலித்தது.
ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் இந்த சந்தோஷ மனநிலை இல்லை. ஏனெனில், அவர்களது கல்வி முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக, இயல்பு நிலை தொலைந்து சமநிலை தவறும்போது சட்டென அவர்கள் தற்கொலை உள்ளிட்ட தவறான முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் தொடர்ச்சியாக தமிழக பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகள் பத்திரமாய் வீடு திரும்புவார்களா என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு தினம் ஒரு ஊரிலிருந்து வரும் பள்ளிக் குழந்தைகளின் தற்கொலைச் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.