தலைப்பு செய்திகள்
ஹிஜாப் விவகாரம் குறித்து வெளிநாடுகள் கருத்து கூற வேண்டாம்.. – மத்திய அரசு.
ஹிஜாப் விவகாரத்தில் உள்நோக்கம் கொண்ட கருத்துக்களை வெளிநாடுகள் சொல்ல வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. மேலும் ஹிஜாப் அணிந்து வந்த மானவிகளுக்கு வகுப்பறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர்கள் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கினர். இருதரப்பு மாணவர்கள் போராட்டத்தால் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் கடந்த சில நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்தது.
அங்கு பதற்றம் அதிகரித்ததை அடுத்து தொடர்ந்து பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் விடுமுறை விடப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவுபடி திங்கள் கிழமை முதல் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மட்டும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், ஹிஜாப் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை மத அடையாளங்கள் கொண்ட ஆடைகளை மாணவர்கள் அணிந்து செல்லக்கூடாது என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆடை பிரச்சனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
முன்னதாக மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த கல்லூரி மாணவி முஸ்கானை நோக்கி, காவித்துண்டு அணிந்து வந்த 50க்கும் மேற்பட்டோர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். பதிலுக்கு அந்த மாணவியும் ‘ அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்டார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. பலரும் மாணவி முஸ்கானுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், முஸ்கானின் படத்தை தமது ட்விட்டர் கணக்கின் புரொஃபை படமாக வைத்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் பாகிஸ்தான் ஆளும் கட்சியான பிடிஐயும் முஸ்கான் ‘அல்லாஹூ அக்பர் ’ என முழக்கமிடும் வீடியோவை பகிர்ந்து , துணிச்சலுக்கு உதாரணம் என என தெரிவித்துள்ளது. மேலும் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் அழிவு மட்டுமே இருப்பதாக கூறியிருக்கிறது. இதனையடுத்து ஹிஜாப் விவகாரம் குறித்து வெளிநாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என தெரிவித்திருக்கிறது.