தலைப்பு செய்திகள்
உடுமலை கோவில்களில் நாளை மகா சிவராத்திரி வழிபாடு: திருமூர்த்திமலையில் திருச்சப்பரம் ஊர்வலம்.
உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இன்று திருச்சப்பர பூஜை நடக்கிறது.உடுமலை, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அம்சமாக, சிவராத்தியன்று, மூலவர் ஆலயத்திற்கு மேல் உள்ள கோபுரம், திருச்சப்பரமாக கொண்டு வரப்பட்டு, சிவராத்திரி பூஜைகள் துவங்குவதற்கு முன், மும்மூர்த்திகளின் ஆலய கோபுரமாக நிறுவப்படுவது பாரம்பரிய முறையாக உள்ளது.இந்தாண்டு சிவராத்திரி விழா, இன்று துவங்குகிறது.
திருச்சப்பரம் செய்யப்படும் பூலாங்கிணர் கிராமத்தில், இன்று (28ம் தேதி) இரவு, 8:00 மணிக்கு திருச்சப்பர பூஜை நடக்கிறது. தொடர்ந்து, திருச்சப்பரம் புறப்படுகிறது.வழியோர கிராமங்களில், திருச்சப்பரத்திற்கு வரவேற்பு அளிக்கும் பொதுமக்கள், தாங்கள் விளைவித்த, தேங்காய், பழம், நெற்கதிர்கள், சிறுதானியங்கள், உப்பு, காய்கறிகள் வீசி வழிபாடு நடத்துவர்.நாளை (1ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, திருச்சப்பரம் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலைக்கோவிலுக்கு அருகே உள்ள, யானை உரசும் பாறை அருகே, மலைவாழ் மக்கள், வனங்களில் சேகரித்த தேன், விளைவித்த மலைக்காய்கறிகள், தினை உள்ளிட்ட பொருட்கள் படைத்தும், பாரம்பரிய நடனம் ஆடியும் வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, திருச்சப்பரம் மும்மூர்த்திகள் எழுந்தருளி வரும், மூலவர் கோபுர விமானமாக நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.அதற்கு பின்னர், சிவராத்திரி விழா நான்கு கால பூஜைகள் துவங்குகின்றன. நான்காம் கால பூஜைக்கு பின், அதிகாலை, 5;00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், 16 தீப தரிசனம் எனப்படும் சோடச உபசார தீபாராதனை நடக்கிறது.சிவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, இரவு முழுவதும் திருமூர்த்திமலை கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சிபொள்ளாச்சி, செல்லப்பம்பாளையம் பிரிவு திருமுறைகல்லாங்காடு ஆனந்த வள்ளித்தாயார் உடனுறை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் ஸ்ரீ வராஹி அம்மன் கோவிலில், 29ம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா மற்றும் சதுரகிரிமலை யாத்திரை நாளை நடைபெறுகிறது.நாளை, மார்ச் 1ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமம், இரவு, 6:30 மணிக்கு முதல்கால பூஜை, பள்ளயம், மலர் வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.
இரவு, 9:30 மணி முதல், காலை, 5:30 மணி வரை, இரண்டாம் கால பூஜை, தேவாரம், திருவாசகம் பாராயணமும், மூன்றாம் கால பூஜை, கும்மியாட்டம், நான்காம் கால பூஜை நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. இரவு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.தேவம்பாடிவலசு பார்வதி தேவி, கங்காதேவி உடனமர் அம்மணீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியையொட்டி நாளை மாலை, முதல் கால பூஜை, இரவு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, மூன்றாம் கால பூஜை, அதிகாலை, நான்காம் கால பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, 2ம் தேதி தேவம்பாடி வலசு, காளிபாளையம் மற்றும் ஆதியூர் ஸ்ரீ ராமர் பஜனை குழு சார்பில், ராமர் பஜனை குழு இன்னிசை கச்சேரி நடக்கிறது.கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நாளை இரவு, விக்னேஸ்வரர், கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ஏகாதச ருத்ர ேஹாமம், நான்கு கால அபிேஷகம், கரப்பாடி இளைஞரணி வழங்கும் தேவராட்ட நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.