தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-ல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3-ம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டது. இதன்படி, பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாண்வர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு துவங்கி உள்ளது. மாவட்டத்தில் 370 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 26 ஆயிரத்து 741 பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 22 ஆயிரத்து 547 பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் திருப்புதல் தேர்வு எழுதினர்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருப்புதல் தேர்வில் மாணவர்கள் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுதினர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி மாணவர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டது.