திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.
ராகுல் காந்தி எம்.பி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் திருச்சி ஜங்ஷனில் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் கவுன்சிலர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச்சி ஜங்சன் வழிவிடு முருகன் கோவில் அருகில் ஒன்று திரண்ட காங்கிரசார் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதன்பின் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.