நவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூரில் பூம்புகார் கலை பொருட்கள் விற்பனை கண்காட்சி துவங்கியது.

நவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூரில் பூம்புகார் கலை பொருட்கள் விற்பனை நிறுவனத்தில், கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாகும்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார், கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்க பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் “கொலு பொம்மைகள் கண்காட்சியை” நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் தஞ்சாவூர், பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கி வரும் அக்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இக்கண்காட்சியினை திறந்துவைத்தார்.
இக்கொலு கண்காட்ச்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல். ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நவராத்திரிக்கு தேவையான கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள் அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள். நவகிரகங்கள், அத்திவரதர் நின்ற கோலம்,

தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட். குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தாபார் செட். மைசூர் தசரா செட். கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட். கருட சேவை செட், வைகுண்டம் செட். துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி ஞாயிறு உட்பட தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய நடைபெற உள்ளது.
இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி, தள்ளுபடி சேவைக் கட்டணமுமின்றி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.20லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.
