படிக்கட்டில் தொங்கி சாகசம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; வேலூர் எஸ்.பி எச்சரிக்கை.
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வதை தடுக்க வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நடைபெற்றது.
கூட்டத்தில் எஸ்.பி மணிவண்ணன் பேசும்போது;-
காலை மற்றும் மாலை வேளையில் மாணவர்களின் நலனுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் பள்ளி மாணவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும். படியில் தொங்கியபடியும், தரையில் கால்களை தேய்த்தவாறும் சாகசம் செய்து பயணிக்கும் மாணவர்கள் குறித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், படியில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்யும்போது அதை நடத்துனர்கள் கண்டித்தால் அவர்களை மாணவர்கள் தாக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் மாணவர்களுக்கும், நடத்தினர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது என கூறினர்.
அதற்கு எஸ்.பி மணிவண்ணன் பதில் அளிக்கையில் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் மாணவர்கள் யாராவது தகராறில் ஈடுபட்டால் உடனடியாக காவல்துறையை அழைக்கலாம். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகனங்களை ஓட்ட அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்றார்.