மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையிலிருந்து உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது பெய்து வந்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பெருமாள்மலை, பாலமலை, பண்ணைக்காடு, வடகரைபாறை, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென படிப்படியாக உயர்ந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள எச்சரிக்கையும், 53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில் இன்று இரவு 8.30 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து மஞ்சளாரின் ஆற்றங்கரையோர பகுதிகளான தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கெ.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மஞ்சளார் அணைக்கு வரும் உபரி நீரை திறந்து விட்டு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்பொழுது அனைக்கு நீர் வரத்தானது 217 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து அப்படியே 217 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 435.32 மில்லியன் கனாடியாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இரவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர் வரத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை பெய்து அணைக்கு கூடுதலாக நீர் வரும் நிலையில் வரும் நீரை அப்படியே வெளியேற்றி நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.