BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வல்லம், பிப்.14- தஞ்சாவூர் அருகே திருச்சென்னம்பூண்டி பகுதியில் அமைய உள்ள இரண்டாவது பம்ப் ஹவுஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது திருச்சென்னம்பூண்டி கிராமம். இப்பகுதி வழியாக ஓடும் கொள்ளிடம் ஆற்றில், ஏற்கனவே ஒரு பம்ப் ஹவுஸ் இயங்கி வருகிறது. இதிலிருந்து புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், அறந்தாங்கி பகுதிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சச போர்வெல் மூலம் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், மேலும் புதிதாக 43 ஊர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மற்றொரு பம்ப் ஹவுஸ் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு திருச்சென்னம்பூண்டி வி.ஏ.ஓ., அலுவலம் முன்பு கிராம மக்கள், விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு கொடி ஏந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பூதலுார் தாசிலார் பிரேமா பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

அப்போது இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படும் வரை ஜனநாயக முறையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று திருச்சென்னம்பூண்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் கூறுகையில்; கொள்ளிடம் ஆற்றில் எங்கள் கிராம பகுதியில் ஏற்கனவே மூன்று இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதனால் சாகுபடி பயிர்களுக்கு போர்வெல்லில் தண்ணீர் வராமல் கூடுதல் செலவு செய்து அதிக ஆழத்திற்கு மீண்டும் புதிதாக போடும் நிலை விவசாயிகளுக்கு உருவானது.

கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் போர்வெல் மூலம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து, குடி தண்ணீரில் காரத்தன்மை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் புதியதாக பம்ப் ஹவுசிற்காக போர்வெல் அமைத்தால் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்றி வைத்தோம் என்றனர்.

படவிளக்கம்

தஞ்சாவூர் அருகே திருச்சென்னம்பூண்டி பகுதியில் அமைய உள்ள இரண்டாவது பம்ப் ஹவுஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )