ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார்!
குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்.பி!
காட்பாடி ரயில்வே போலீசாருக்கு சென்னை ரயில்வே எஸ்.பி.பாராட்டு!
வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி (63) என்பவர் கடந்த 3ம் தேதி ஒன்றாவது நடை மேடையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது,பெண் ஒருவர், தனது 3 மாத பெண் குழந்தையை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக்கொள்ளும் படியும், ஐந்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் கூறிச் சென்றவர் மீண்டும் வரவில்லை.
பின்னர், மூதாட்டி சுந்தரி, ரயில் நிலையத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்ததை தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது,பெண் ஒருவர் கைக் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்து செல்வது.. மற்றும் வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் குழந்தையை விட்டுச் சென்ற பெண் மற்றும் அவரது கணவரை பிடிக்க சென்னை ரயில்வே எஸ்.பி காட்பாடி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் முரளிமனோகரன் ஜெயக்குமார் சுமதி தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார், குழந்தையை விட்டுச் சென்ற கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி, விஜய் தம்பதியரை கண்டுபிடித்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதும்… நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை வறுமையின் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தில் மூதாட்டியிடம் கொடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட பெற்றோர் சென்னை ரயில்வே எஸ்.பி பொன்ராமு நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள அறிவுரை கூறினார். மேலும் மீட்கப்பட்ட குழந்தைக்கு பெயர் வைக்கப்படாத நிலையில், எஸ்பி பொன்ராமு குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டினார். குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை பிடிக்க துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படையினருக்கு எஸ் பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.