ராஜபாளையம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் சபரி மலை. இவருக்கு மலையடிவாரத்தில் உள்ள மலையாண்டி பாறை அருகே விவசாய நிலம் உள்ளது. தன்னுடைய நிலத்தில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இன்று பிற்பகலில் வழக்கம் போல தன்னுடை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அப்போது இவரது நிலத்தின் அருகே செல்லும் நீரோடையில் பதுங்கி இருந்த காட்டெருமை சபரி மலையை தாக்கியுள்ளது.
இதில் வயிறு, இடுப்பின் பின்புறம், முதுகு உள்ளிட்ட பாகங்களில் சபரிமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரது கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டதால் காட்டெருமை வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.
அருகே இருந்தவர்கள் உதவியுடன் விவசாயி தற்போது அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்.