வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு, ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மேசை நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்களை செவ்வாய்க்கிழமை நன்கொடையாக வழங்கினர்.
பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில திட்டக் குழுவின் மூத்த திட்ட அலுவலர் கிருபா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பிர்லா, வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பொற்கொடி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலையில் ராம்கி பவுண்டேஷன் நிர்வாகிகளான ராமிரெட்டி, வானமாமலை, வெங்கடேசன், பிரம்மையா, சதீஷ், பரமசிவம் ஆகியோர் இணைந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான மேஜை நாற்காலியை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சரவணன், கிராம கல்வி மேலாண்மை குழு தலைவி சிவசங்கரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.