வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(வயது 67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை ஓட்டுநர் ஆவார். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார்.
இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் முறையாக அனைத்து ஆவணங்களையும் வைத்து விண்ணப்பித்திருந்தார்.
மேலும் வீட்டின் அருகே மின்கம்பம் நடுவதற்காகவும் ரூ.27,000 ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு மற்றும் மின்கம்பம் நடும் பணிகள் மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து இருசப்பன், விரிஞ்சிபுரம் இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியிலிருந்து அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த போர்மேன் கிருபாகரன்(வயது 50), மின் இணைப்பு மற்றும் மின் கம்பம் நட ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் தர விருப்பமில்லாததால் மனுதாரர் இருசப்பன், இதுகுறித்து வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சங்கரிடம் புகார் அளித்தார்.
அதன்படி, காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான போலீசார் நேற்று புகாரரான இருசப்பனிடம் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்து கையூட்டுக் கேட்ட மின்வாரிய போர்மேனிடம் கொண்டு சென்று கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
பின்னர், இருசப்பனை பின் தொடர்ந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், இருசப்பன் மின்வாரிய போர்மேன் கிருபாகரனுக்கு போன் செய்தபோது, அவர் கூறுகையில் தெள்ளூர் பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் என்று அங்கு வர சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து, தெள்ளூரில் இருசப்பன், போர்மேன் கிருபாகரனிடம் பணம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான போலீசார் போர்மேன் கிருபாகரனை கைரேகை பதிந்த லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து, கிருபாகரனை விரிஞ்சிபுரத்திலுள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட போர்மேன் கிருபாகரன் மீது வழக்குப் பதிவு செய்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கூப்பிட்டுச் சென்று மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் ஒப்புகை சீட்டு பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவிட்டத்தின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விரிஞ்சிபுரத்தில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.