BREAKING NEWS

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, பொய்கை புதூரில் 15 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்! விவசாயிகள், ரைஸ்மில் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடும் அவதி!

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, பொய்கை புதூரில் 15 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்! விவசாயிகள், ரைஸ்மில் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடும் அவதி!

டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் 24 மணி நேரத்திற்குள் மாற்றித் தரவும் மற்றும் ஆல்டர்நேட் டிரான்ஸ்பார்மரை வைத்து மின் பகிர்மானம் வழங்க தமிழக அரசுக்கு தனிச் சட்டம் இயற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் விமான நிலையம் அருகே அணைக்கட்டு செல்லும் நெடுஞ்சாலையில், பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கை புதூர், நாட்டாமங்கலம், நரசிங்கபுரம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் சுமார் 15 நாட்களுக்கும் மேலாகப் பழுதடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள், ரைஸ்மில் உரிமையாளர்கள் மற்றும் இதர மும்முனை மின்சாரத்தைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.200-க்கும் மேற்பட்ட மும்முனை மின்சார விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!
இந்த டிரான்ஸ்பார்மர் பழுதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வீட்டு உபயோக மின் இணைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. விவசாயப் பாசனம், அரிசி ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் மும்முனை மின்சாரத்தைச் சார்ந்த தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பொருளாதார இழப்பையும் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

டிரான்ஸ்பார்மர் பராமரிப்பில் தொடர்கதையாக நீடிக்கும் அலட்சியம்..?
டிரான்ஸ்பார்மர்களில் ஆயில் அளவைக் கண்காணித்தல், உரிய கால இடைவெளியில் பராமரித்தல் மற்றும் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்தல் போன்ற பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியைப் பொதுமக்கள் எழுப்புகின்றனர். கடும் வெப்பம் மற்றும் அதிக மின் சுமை காரணமாக ஏற்படும் பழுதுகளைத் தடுக்கவும் பராமரிக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
மேலும், டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் அதனை உடனடியாகச் சீரமைப்பதற்கான தெளிவான நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும். குறிப்பாக, விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், பழுதுகளை விரைந்து 24 மணி நேரத்திற்குள் சரிசெய்ய உரிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அந்த 24 மணி நேரமும் ஆல்டர்நேட் டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்சாரத்தை இடையூறின்றி வழங்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
பழுதுபார்ப்புச் செலவு வசூல் குறித்தும் விசாரணை தேவை!
டிரான்ஸ்பார்மர் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக வீடுகள், விவசாய மின்மோட்டார் இணைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் தலா ரூ.500 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்படுவதாகவும், மொத்தச் செலவு சுமார் ரூ.75,000-க்கும் மேலாகும் எனக் கூறப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டவிரோதப் பண வசூல் ஏதேனும் நடைபெறுகிறதா என்பதை எரிசக்தித் துறை உயர் பதவி ஊழியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
தற்போது 15 நாட்களுக்கும் மேலாகியும் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படாததால், பழுதுபார்ப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எரிசக்தித் துறை, விஜிலென்ஸ் துறை தலையிடக் கோரிக்கை!
இதுகுறித்து தமிழக எரிசக்தித் துறை, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் பதவி ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் விஜிலென்ஸ் துறை உரிய கவனம் செலுத்தி, டிரான்ஸ்பார்மர் பழுதுக்கான காரணம், பராமரிப்புப் பணிகளின் நிலை மற்றும் பண வசூல் குறித்த புகார்களை விசாரிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாகச் சீரமைத்து, விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரத் தடையை நீக்க வேண்டும். பணிகள் நிறைவடைந்த பின்னர், சீரமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டதற்கான விவரங்கள், இதற்கு உண்டான செலவினங்கள் உள்ளிட்டவற்றைப் புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் மற்றும் காணொளிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர்.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் உயர் பதவி ஊழியர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS