அணைக்கட்டு மலைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 24 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு உட்கோட்டத்தில் உள்ள பீஞ்சமந்தை, அல்லேரி, ஜார்தான் கொல்லை, பட்டிகுடிசை ஆகிய மலைப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வந்து அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். பாஸ்கரன் (தலைமையிடம்) தலைமையில், அணைக்கட்டு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார், 5 காவல் ஆய்வாளர்கள், மாவட்ட தனிப்படை போலீசார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் இணைந்து அதிரடியாக இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் முறையான ஆவணங்கள் இல்லாத 24 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக திருட்டு வாகனங்களை வாங்குவதும், ஓட்டுவதும் சட்டப்படி குற்றம் என்றும் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
