அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து வழிமறித்து ஏன் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட வழித்தட எண் 22, தநா 32 நா 3790 என்ற எண்ணுள்ள அரசு பேருந்து விருத்தாசலத்தில் இருந்து சேப்பாக்கம், ஐவதுகுடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் சென்று வருகிறது.
நாள்தோறும் இப்பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பேருந்து சரிவர நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லாமல் செல்லுவதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இன்றும் வழக்கம்போல் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் அரசு பேருந்தை வழிமறித்தனர்.
பின்னர் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஓடி சென்று பேருந்தில் ஏறினர். அப்போது பொதுமக்கள் இளைஞர்கள் ஏன் இவ்வாறு தினசரி இதுபோன்று பேருந்தை நிறுத்தாமல் செல்கிறீர்கள் இதனால் நாங்கள் அவதி அடைந்து வருகின்றோம் என்று ஓட்டுநர் இடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஓட்டுநர் சரவணன் என்பவரும் நடத்துனரும் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.