ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பரபரப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் அரசு நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது .
இந்த நியாய விலை கடையில் பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நியாய விலை கடையில் இன்று ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது.
அப்போது ரேசன் வாங்க வந்த பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகன் மகன் மோகன் ரேசன் அரிசி வாங்கியுள்ளார். அந்த ரேசன் அரிசியில் ஐந்துக்கும் மேற்பட்ட எலிகுஞ்சுகள் உள்ளே இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அந்த ரேசன்அரிசியை கடைமுன்பாக தரையில் கொட்டி ரேசன்கடை பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .
அவருக்கு ஆதரவாக கிராமமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அரசு ரேசன்அரிசியில் எலிகுஞ்சுகள் இருந்ததால் பாலசமுத்திரம் கிராமமக்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர் .