ஆண்டிபட்டி நகரில் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரம் அடைந்ததையடுத்து தேனி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது . ஆண்டிபட்டியில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில் மழையால் ஆண்டிபட்டி நகரில் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையிலும் , தொற்றுநோய்கள் பரவுவதை தடுத்து மக்களை காக்கும் வகையிலும் ஆண்டிபட்டி நகரில் உள்ள 18 வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலர்கள் கண்காணிப்பில் பணியாளர்கள் நீர்வரத்து வாய்க்கால்களில் கையுறை காலுறை மற்றும் உடல்கவச உடைகளை அணிந்து நீர்வரத்து வாய்க்கால்களில் இறங்கி அடைப்புகளை எடுத்து தூர்வாரி வருகின்றனர்.
இதன் மூலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து காற்றாற்று வெள்ளமாக வரும் மழைநீர் ஆண்டிபட்டி நகரில் தங்காமல் ஓடைகள் மற்றும் வாய்க்கால்கள் வழியாக சென்று வைகைஅணையை அடைய வழிவகை செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆண்டிபட்டி நகரில் மற்ற பகுதிகளில் செல்லும் ஓடைகள் மற்றும் வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.