ஆண்டிபட்டி பகுதிகளில் தொடரும் திருட்டு . முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.
ஆண்டிபட்டி நகர் பகுதியில் வீடுகளிலும் ,கடைகளிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 60,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், பள்லதரப்பட்ட வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், பிரபல தக்காளி மார்க்கெட் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு வணிக வளாகங்களுடன் நகராட்சி அந்தஸ்தை நோக்கி வளர்ந்து வருகிறது.
தினந்தோறும் கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆண்டிபட்டி வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 தினங்களாக வீடுகள் மற்றும் கடைகளில் இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடைகள் மற்றும் வீடுகளில் சிசிடிவி பொறுத்திருந்த நிலையிலும் , முகமூடி அணிந்து கொள்ளையர்கள் திருடுவதால் திருடர்களை பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர்.
பொதுமக்களின் அச்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் போலீஸ் தனிப்படைகளை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என்றும் இரவு நேர ரோந்து பணியை முடுக்கி விட வேண்டும் என்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.