BREAKING NEWS

ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை..

ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே உள்ள ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

இஸ்லாமிய இறைத்தூதர்களில் முக்கியமானவர்களின் ஒருவராக கருதப்படுபவர் இப்ராஹிம். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே மசூதிகளில் குவிந்தனர். தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். மேலும், ஏழைகளின் பசியைப் போக்கும் வகையில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை பலியிட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி, பொறையார், சங்கரன்பந்தல், வடகரை, ஆக்கூர், திருச்சம்பள்ளி, கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு
தினமும் ஐந்து வேளையும் தொழுதல், தர்ம காரியங்கள் அதிகம் செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர்.

ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் முத்தவல்லி பஷீர் அகமது, செயலாளர் நூருல்லாஹ், பொருளாளர் ஹலில் ரகுமான், இமாம் கமாலுதீன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், விசிக மாநில இஸ்லாமிய பேரவை துணை செயலாளரும், சமூக நல செயற்பாட்டாளருமான முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் ஏராளமானோர் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS