ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த எண்ணெய் கம்பெனியின் பின்னால் தேவையற்ற பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இதனை நேற்று (01.05.2023) மதியம் 3 வாலிபர்கள் திருடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த கம்பெனியில் பணிபுரிபவர்கள் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திமிரி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், கோபிநாத், மற்றும் சிலம்பு, விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில்,
புன்னப்பாடியை சேர்ந்த சந்தோஷ் (20), அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் (19), பில்லேரி கிராமத்தை சேர்ந்த சாரதி (20) என்பதும் பழைய இரும்பு பொருட்களை திருடிக் கொண்டிருந்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் திருடிய இரும்பு பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.