இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயம் வைத்திருக்க திருச்சி காவல் ஆணையர் காமினி போட்ட உத்தரவு

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயமாக வைத்துக் கொள்ள திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, ஐபிஎஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு கட்டாயமாக வார விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, ஐபிஎஸ்., உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி தன் கீழ் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காவல்துறை அதிகாரிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட சில காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என புகார் வருகிறது. இனி வரும் காலங்களில் அது போன்ற புகார்கள் வருவதற்கு இடம் தராமல் வார விடுமுறை வழங்க வேண்டும்.
வார விடுமுறை தருவதில் என்ன பிரச்சனை உள்ளது? என்ன என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும். சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க வேண்டும். காவல்துறை துணை ஆணையர்கள் (DC), வார விடுமுறை வழங்கப்படுகிறதா? என்பதை கண்டறிய வேண்டும். உதவி ஆணையர்கள் (AC) இதனை உறுதி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இன்றைய தேதி வரை யார் யாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். காவலர்களுக்கு கண்டிப்பாக வார விடுமுறை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை நாம் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஆயுதங்களுடன் (துப்பாக்கியுடன்) ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அதனை உதவி ஆணையர்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ, ஒரு சண்டையை சமாதானப்படுத்தச் சென்றபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.