இழப்பீட்டுத் தொகை வழங்காததால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஞானப்பிரகாசம் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். இதனை அடுத்து ஞானபிரகாசத்தின் மனைவி ஜெயக்கொடி திருவாரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு 12 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஜெயக்கொடிக்கு வட்டியுடன் செலுத்த சார்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகும் இழப்பீட்டுத் தொகையை யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காததால் தஞ்சை சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தஞ்சை சார்பு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி 17 லட்சத்தை வட்டி தொகையுடன் செலுத்த உத்தரவு பிறப்பித்தது.
உரிய இழப்பீட்டு தொகையை ஜெயக்கொடிக்கு யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காததால் நீதிமன்ற ஊழியர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர். தஞ்சை யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அலுவலகத்தில் இருந்த கணினிகளை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.