இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அதிரடி.

உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மவுலானா அப்துல் அலா மவுதூதியும், சையத் குதுப் ஆகிய 2 இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், எகிப்து நாட்டவர்களால் எழுதப்பட்ட இந்நூல்கள், இஸ்லாமிய நாடு அமைக்க வலியுறுத்தியிருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தின் அலிகர் நகரின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழகமான இதில் இஸ்லாமியக் கல்வித்துறை கடந்த 1948-ல் அமைக்கப்பட்டது. அப்போதுமுதல் இத்துறையில் உலக முஸ்லிம் நாடுகளின் அறிஞர்கள், கல்வியாளர்கள் எழுதிய பல நூல்கள் மாணவர்களுக்கு பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. இவற்றில், பாகிஸ்தானின் மவுலானா அப்துல் அலா மவுதூதி மற்றும் எகிப்து நாட்டின் சையத் குதுப் ஆகியோரால் எழுதப்பட்டவையும் முக்கிய இடம் பெற்றுள்ளன.
இந்த இருவரும், புனிதக் குர்ஆனைப் புரிந்து கொள்ளுதல், இஸ்லாமிய வாழ்க்கை முறை, இஸ்லாமியர்களின் சட்டம், இஸ்லாமிய மனித உரிமைகள், இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட தலைப்புகளில் எழுதிய சுமார் 12 நூல்கள் உள்ளன. இவை, அலிகர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வித்துறையின் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு பாடத்திட்டங்களின் அம்சமாகப் போதிக்கப்படுகின்றன. இந்த இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களும் தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது.
இது குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வித்துறையின் தலைவரான பேராசிரியர் முகம்மது இஸ்மாயில் கூறும்போது, “மவுலானா அப்துல் அலா மவுதூதி, சையத் குதுப் ஆகியோரின் நூல்களை நாங்களாகவே முடிவு செய்து தடை விதித்துள்ளோம். இவர்கள் இருவரும் தீவிரவாதத்தை போதிப்பதாகப் புகார்கள் உள்ளன. இதனால், அவர்களது நூல்களால் சர்ச்சைகள் கிளம்புவதை நாங்கள் விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தால் தடை செய்யப்பட்ட இந்நூல்களின் ஆசிரியர்கள் இருவரும் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அமைக்க வலியுறுத்தி எழுதியுள்ளனர். இது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் எதிரானது. இதன் முழு விவரம் தெரிந்தும், தெரியாமலும் இந்தியாவிலும் அவை போதிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றை எழுதிய மவுலானா அப்துல் அலா மவுதூதியும், சையத் குதுப்பும் தம் சொந்த நாட்டை எதிர்த்து எழுதியவர்கள் எனக் கருதப்படுகிறது. இருவரும் தம் நாட்டின் அரசுகளால் தண்டிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் பெற்றவர்கள்.