BREAKING NEWS

ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம். டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு

ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம். டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு

ஈரோடு என்றாலே ஜவுளி தொழில் தான் மிகவும் பிரபலானது. இதையடுத்து லெதர் பொருட்கள், கெமிக்கல், பொறியியல் தொழில்கள், தேங்காய் வியாபாரம் உள்ளிட்டவை சிறந்து விளங்குகின்றன.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரத்யேக வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம்

தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களில் மினி டைடல் பார்க் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஈரோட்டில் 50,000 முதல் ஒரு லட்சம் சதுர அடி பரப்பில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான இடம் குறித்து ஆலோசனைகள் நடந்து வரும் சூழலில், முக்கியமான அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு டெண்டர் கோரியது

அதாவது, ஈரோடு மினி டைடல் பார்க் திட்ட வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு நிறுவனங்களும் விண்ணப்பிக்கும். அதில் அரசுக்கு கட்டுப்படியாக கூடிய தொகையை நிர்ணயம் செய்யும் நிறுவனம் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதன்பிறகு மினி டைடல் பார்க் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிக்கை தயார் செய்வர். இதனை தமிழக அரசுக்கு சமர்பிப்பர். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும்.

மினி டைடல் பார்க் என்றால் என்ன?

ஏராளமான ஐடி நிறுவனங்கள் நிறைந்த டைடல் பார்க்கின் சிறிய வெர்ஷன் தான் மினி டைடல் பார்க். இது ஐடி மற்றும் அதனை சார்ந்த சேவைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மினி டைடல் பார்க்குகள் சிறப்பான உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்புடன் கட்டமைக்கப்படும்.

ஸ்டார்ட்-அப்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரிய ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும். ஐடி வேலைவாய்ப்பை அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கம் செய்து மண்டல ரீதியிலான ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவது ஆகும்.

ஈரோடு மக்களுக்கு ஐடி துறையில் வேலை

புதிதாக வரவுள்ள மினி டைடல் பார்க் மூலம் ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடையும். உள்ளூர் மக்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

குறைந்தது ஆயிரம் பேருக்கு ஐடி வேலை கிடைப்பதற்கான சுழல் உருவாகியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஈரோட்டில் தற்போது ஏ.எக்ஸ்.என் இன்ஃபோடெக், கே.ஜி.எம் சாப்ட்வேர்ஸ், ஸ்பேன் டெக்னாலஜி உள்ளிட்ட சிறிய ஐடி நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகின்றன.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கனவு திட்டம்

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஐடி நிறுவனங்கள் பெரிதாக இல்லை. இந்நிலையில் மினி டைடல் பார்க் மூலம் சர்வதேச ஐடி நிறுவனங்கள் ஈரோட்டில் கால் தடம் பதிக்கும் எனத் தெரிகிறது.

இதுபோன்ற மினி டைடல் பார்க் திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவு திட்டத்திற்கு வலு சேர்க்கும் என்கின்றனர்.

தமிழகத்தில் எங்கெல்லாம் மினி டைடல் பார்க் பூங்காக்கள்?

தமிழகத்தில் முதல் மினி டைடல் பார்க் திட்டமானது விழுப்புரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பிறகு தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, நாமக்கல், திருப்பூர், ஊட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS