உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு மறுப்பு: விழாவில் கடிந்து கொண்ட எம்எல்ஏ, கலெக்டர் பரிதவிப்பு, மேயர் மௌனம்!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டது வேலூர் ஓட்டேரி பகுதி. இதில் வேலூர் மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 53 மற்றும் 57 ஆகிய வார்டுகளுக்கு வேலூர் ஓட்டேரி சுசி நாடார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 18ம் தேதி நடந்தது.

இந்த முகாமிற்கு முறையான அறிவிப்பை பொதுமக்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்று அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகிறது. அத்துடன் நின்றார்களா என்றால் இல்லை.
இந்த பகுதி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஆகும். அணைக்கட்டு தொகுதியின் எம்எல்ஏவும், வேலூர் மாவட்ட திமுக செயலாளருமான ஏ.பி. நந்தகுமாருக்கு முறைப்படி அழைப்பும் விடுக்கவில்லை, அவருக்கு தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இந்த முகாமில் அழையா விருந்தாளியாக வந்த எம். எல். ஏ., ஏ.பி. நந்தகுமார் யார் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்தது ஏன் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அனைவரது முன்னிலையிலும் கடுமையாக சாடினார்.
அப்பொழுது செய்வது அறியாது அருகில் நின்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி திரு திருவென பார்த்ததோடு பரிதவிப்புக்கு உள்ளானார்.
இவருக்கு பக்கத்தில் நின்ற வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவும் மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி ஏதோ கடமைக்காகவும், சம்பிரதாயத்துக்காகவும், சடங்கு போல உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த முகாம் நடைபெறுவது குறித்து வார்டு 53 மற்றும் 57 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு முறையாக அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் வருகை என்பது மிகவும் குறைந்து காணப்பட்டது.

அரசு அதிகாரிகள் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆணையராக பணியாற்றும் சௌகத் அலி உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் கடுமையாகவும், அவர்களை விரட்டும் நோக்கத்திலும் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வீட்டிலிருந்து ஏதோ கொண்டு வந்து மக்களுக்கு கொடுப்பது போல இவரது செயல்பாடுகளும், எண்ணங்களும் இருந்தது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இல்லாமல் இந்த முகாம் வெறிச்சோடியதும் குறிப்பிடத்தக்கது.
இனிவரும் முகாம்களுக்காவது முறைப்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பது மற்றும் அறிவிப்பு செய்வது, அத்துடன் யார் யாருக்கு முறையாக அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலிட்டு அந்த பட்டியல் படி தவறாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களிலாவது இதை முறையாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் கடைபிடிக்குமா? அல்லது கண்டும் காணாமல் வழக்கம்போல் செயல்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
