‘எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் சேர்ந்திருக்கிறது’- அதிர்ச்சி அளிக்கும் ஆணைய அறிக்கை!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையை அதிமுக அரசு சரியாகக் கையாளவில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்துப் பேசவில்லை.
அவர்களின் மனுக்களைப் பெற்று கருத்துகளைக் கண்டறிய அன்றைய அரசு தயாராக இல்லை. ஊர்வலமாக வந்த மக்கள் மீது பலாத்காரத்தைப் பயன்படுத்திக் கலைப்பதற்குத் திட்டமிட்டார்கள்.
துப்பாக்கி சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து வெளியிட்டு இருக்கிறது. 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் துள்ளத் துடிக்கப் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
40 பேர் பலத்த காயமடைந்து இருக்கிறார்கள். 64 பேர் சிறிய அளவிலான காயம் அடைந்திருக்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் பழனிசாமியின் எதேச்சை அதிகாரத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
அதிமுக ஆட்சியின் ஆணவத்திற்காகத் தூத்துக்குடியில் இத்தனை உயிர்கள் பலியானது. நானும் டிவி பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
உள்துறையைக் கையில் வைத்திருந்த நாட்டின் முதலமைச்சர் பேசும் பேச்சா இது என நாடே கோபத்தால் கொந்தளித்தது. அந்த அளவிற்கு மிகப் பெரிய உண்மைக்கு மாறான தகவலை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பேசியிருக்கிறார்.
கடப்பாரையை விழுங்கி விட்டு கசாயம் குடித்தமாதிரி எனக் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த அளவிற்கு மிகப் பெரிய பொய்யை அவர் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது எவ்வளவு பெரிய தவறு என அவர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி இருக்கிறது.
அந்த ஆணைய விசாரணையில் சாட்சியாக விசாரிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடைபெறும் சம்பவங்களையும்,
நிலவரத்தையும் நிமிடத்திற்கு நிமிடம் அன்றைய முதல்வராக இருந்த பழனிசாமியிடம் தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார்கள். எனவே ஊடகத்தின் மூலம்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தெரிந்து கொண்டேன் என அவர் சொல்லியிருப்பது வேதனையானது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும்” என்றார்.