மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா, ராஜாமடம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கீழதோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். 250க்கும் மேற்பட்ட பைபர் நாட்டு படகு இந்த கிராமத்தில் இருக்கிறது.
சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் 8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முக துவாரங்களை அடைத்து கிடக்கும் மணல்களை தூர்வாரும் பணியும் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
எட்டு கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இந்த பணியில், மீன் இறங்குதளமும் சில கட்டிடங்கள் மட்டும் கட்டப்பட்டு முக துவாரங்களின் மணல் திட்டுக்கள் தூர்வாரப்படவில்லை என்றும் அது பற்றி ஒப்பந்ததாரரிடம் கேட்ட பொழுது ஒதுக்கப்பட்ட நிதிக்கான வேலை முடிந்துவிட்டது. இதற்கு மேல் முக துவாரங்களில் தூர்வார முடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடற்கரையில் இருந்து இந்த கீழதோட்டம் கிராமத்திற்குள் 250 படகுகளும் வந்து போவதற்கான ஒரே வழி இந்த முக துவாரத்தில் உள்ள வாய்க்கால்கள் மட்டுமே, அதனை மனதில் வைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக துவார மணல் திட்டுக்கள் அகற்றுவதற்கு டெண்டர் விடப்பட்டது.
டெண்டர் விடப்பட்டதற்கான முக்கியத்துவம் நிறைந்த அந்த மணல் முக துவார மணல் திட்டுகளை அப்புறப்படுத்தாமல் டெண்டர் பண்ணி முடிந்ததாக ஒப்பந்ததாரர் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இது பற்றி பலமுறை ஊர் பஞ்சாயத்தார்கள் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த மணல் திட்டுகளை அப்புறப்படுத்தாததால், 250 நாட்டுப் படகு மீனவர்களும் கிராமத்திற்குள் வந்து போக முடியாததால், அத்தனை மீனவர்களும் தொழில் செய்ய முடியாமல் முடங்கி கிடப்பதாக கூறி இன்று காலை அந்த கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் இறங்கி மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்த்தட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து தமிழக அரசு அறிவித்த இந்த திட்டத்தை முறையாக செய்யாத ஒப்பந்ததாரர்களின் பணியினை ஆய்வு செய்யாமல் விட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்வளத்துறை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கூறினர்.