ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்! மாநில அரசு மின் கட்டண,உயர்வு வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும்!!

ஆகஸ்ட் 30 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலந்தழுவிய மறியல் போராட்டம்!!
தஞ்சையில் ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட குழு கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜவீதி கட்சி அலுவலக கூட்ட அரங்கில் த. கிருஷ்ணன் தலைமையில் இன்று காலை10 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்து உத்தராபதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் சி. சந்திரகுமார், பா பாலசுந்தரம், வீரமோகன், வீ. கல்யாணசுந்தரம், கோ சக்திவேல், ம விஜயலட்சுமி, ஒன்றிய செயலாளர் பேராவூரணி ஆர்.பி.கருப்பையா, பட்டுக்கோட்டை நகரம் வ.விஜயன், திருவோணம் மு.பால்ராஜ் ,ஒரத்தநாடு வாசு இளையராஜா, தஞ்சாவூர் மாநகரம் ஆர்.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒன்றிய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளது. அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. அண்மையில் அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிக்கிறது. ஈமசடங்கு செய்யும் மயானச் செலவின் மீதும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதுநாள்வரை நாம் கண்டிராத வகையில் வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் வாழ்க்கை தரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வேலையிழப்பும், வருமானக் குறைவும் மக்கள் வாழ்வை தாக்கியிருக்கும் நிலையிலும், அம்பானி, அதானி குழும நிறுவனங்கள் பெரும் செல்வக்குவிப்பை பெற்றுள்ளன.ஒன்றிய அரசு மக்கள் வாழ்க்கை தரத்தை பாதுகாப்பதில், படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது மின்சார சட்ட திருத்த மசோதவை நிறைவேற்றி, மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழி செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரம் உள்பட மின் கட்டண மானியங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை போன்ற ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், கைவிடவும், மற்றும் தமிழ்நாடு அரசு குடும்பங்களின் வாழ்க்கை நெருக்கடி கழுத்தை முறிக்கும் சுமையாகி இருக்கும் போது, வீட்டு வரி, சொத்துவரி, மின்கட்டணங்கள் போன்றவற்றை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்து, வரி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் வரும் 30.08.2022 ஆம் தேதி செவ்வாய் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என திருப்பூரில் நடைபெற்ற கட்சியின் மாநில 25வது மாநாடு தீர்மானித்துள்ளதன் அடிப்படையில் வருகிற ஆகஸ்ட்30 ம்தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 1000 பேர் மறியலில் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டது.
