ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை.

அறுவடைக்கு இடையே பெய்த கனமழையால், தண்ணீரில் மிதக்கும் நெல்மணிகளும், அறுவடை இயந்திரமும். ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் புதுகல்விராயன் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளும்,

அறுவடை செய்ய வேண்டிய நெல்மணிகளும் சுமார் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் மூழ்கியதால் அறுவடை செய்யமுடியாமல் வேதனையில் தவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நேற்று முதல் அறுவடை செய்து கொண்டிருந்தோம், நேற்று மாலை பெய்த மழை மற்றும் நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக விளைநிலங்கள் முழுவதும் கடல் போல் காட்சி அளிப்பதாகவும், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து விட்டதாகவும்,

பாதி அறுவடை செய்தும், மீதி அறுவடை செய்ய உள்ள நிலையில் நெல்மணிகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியதால் இனி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தண்ணீர் வடிந்து அறுவடை செய்தாலும் ஒரு ஏக்கருக்கு இரண்டு மூட்டைகள் தான் நெல்மணிகள் கிடைக்கும், பாதி நெல்மணிகள் இயந்திரத்தில் அடிபட்டு வீணாகி போகும் என தெரிவித்துள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு ஒரு மணி நேரம் அறுவடை இயந்திரம் அறுக்க வேண்டிய நிலையில், தற்போது நீரில் மிதப்பதால் இது நான்கு மணி நேரம் கூடுதலாக ஏற்படும், இதனால் தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என கண்ணீர் சிந்திக்கின்றனர்.

இதுவரை ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, அறுவடை செய்து லாபத்தை பார்த்து விடலாம் என்று நேரத்தில், ஒரு இரவில் பெய்த மழையால் மொத்த உழைப்பும் வீணாகிப் போய்விட்டதாக கூறுகின்றனர்.

எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
