கடலூர் அருகே ஆபத்தான முறையில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.! மேம்பாலம் கட்டித்தர கிராமத்தினர் கோரிக்கை.!

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அடுத்துள்ள மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பங்கள் மணிமுத்தாற்றின் இரு புறங்களிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிமுத்தாற்றின் அப்பால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் பல உள்ளது . ஆற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், அவசர சூழ்நிலையில் மருத்துவமனை மற்றும் வெளியூர்களுக்கு பொதுமக்கள் சென்றுவர முடியாமல் கிராமத்திலேயே முடங்கி கிடக்கும் அவலம் நிலவி வருகிறது.
குறிப்பாக தற்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இருப்பளவு தண்ணீரில் தினந்தோறும் சென்று வருகின்றனர்.
பலமுறை மேம்பாலம் கட்டித்தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு திட்டம் உருவாக்கி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி புதிய மேம்பாலம் கட்டி தர கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை கொடுத்துள்ளனர்.