கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர். ஏக்கருக்கு 20,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 409 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக தஞ்சையில் 17 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு அருகே நாற்று நட்டு 20 நாட்களே ஆன சம்பா பயிர் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ளதால், இளம் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதிகளில் வடிகால் வாய்க்கால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர் மழை இருப்பதால் இந்த தண்ணீர் வடிய வாய்ப்பில்லை எனவும், ஒரு வேளை தண்ணீர் வடிந்தால் கூட பாதிக்கு பாதிதான் தங்களுக்கு பயிரை காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு இப்பகுதியில் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
